பின்னலாடை நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன


பின்னலாடை நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன
x
தினத்தந்தி 28 March 2022 5:45 PM IST (Updated: 28 March 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

பின்னலாடை நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன

பொதுவேலைநிறுத்தம் அறிவித்தபோதிலும் நேற்று திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
பின்னலாடைத்துறை
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாட்கள் பொது வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கிறது. பொதுவேலைநிறுத்தத்தை முன்னிட்டு தொழிற்சங்க நிர்வாகிகள், பின்னலாடை உற்பத்தியார்கள் சங்கத்தினரிடம் நோட்டீஸ் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.
நேற்று காலை வேலைநிறுத்தம் தொடங்கியது. ஆனாலும் பனியன் நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட்டன. கொரோனா பாதிப்பு முடிந்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை மீண்டு வருகிறது. நூல் விலை உயர்வு, அனைத்து மூலப்பொருட்களின் உயர்வு, ஜாப்ஒர்க் கட்டண உயர்வு என தொடர் பிரச்சினைகளை தொழில்துறையினர் சந்தித்துள்ளனர். வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை பின்னலாடை துறையினர் பெற்றுள்ளனர்.
ஆர்டர்கள்
பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரித்து, குறித்த காலத்துக்குள் வர்த்தகர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளது. கப்பல் போக்குவரத்து பாதிப்பு, கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக, தயாரித்த ஆடைகளை திட்டமிட்டப்படி பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது சிக்கலாக உள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 2 நாட்களே இருப்பதால் வர்த்தக இலக்குகளை எட்டுவதற்கான முக்கிய தருணம் இதுவாகும். தற்போதைய சூழ்நிலையில் ஆடை உற்பத்தியை நிறுத்தினால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும். ஆடை தயாரிப்பில் மேலும் காலதாமதம் ஏற்படும். கப்பல், கண்டெய்னர்கள் கிடைக்காமல் தயாரித்த ஆடைகள் துறைமுகங்களிலேயே தேங்கும் அபாயம் உள்ளது.
பனியன் நிறுவனங்கள் செயல்பட்டன
குறித்த காலத்துக்குள் ஆடைகளை வெளிநாடுகளுக்கு சென்று சேராவிட்டால் உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும். தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு மனதளவில் ஆதரவு அளித்தாலும், தொழிலை பாதுகாக்க வழக்கம் போல் ஆடை உற்பத்தியை தொடர்ந்தனர். வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பணிக்கு வந்து சென்றனர். இதனால் நேற்று பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

Next Story