புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்


புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 28 March 2022 8:01 PM IST (Updated: 28 March 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

மரப்பாலம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் மனு அளித்தனர்.

ஊட்டி

மரப்பாலம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் கூடலூர் அருகே மரப்பாலம் அரசு பள்ளியில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- 

சுவர்களில் விரிசல்

மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 43 பேர் படித்து வருகின்றனர். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பள்ளி கட்டிடம் கடந்த 2003-ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடம் தரமாக கட்டப்படாததால் மழைக்காலங்களில் கூரையின் மேல் நீர் தேங்கி, கசிவு ஏற்பட்டு வந்தது. 

தற்போது மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன. கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி வேறு கட்டிடத்தில் அவர்கள் அமர வைக்கப்பட்டு உள்ளனர். அந்த கட்டிடமும் பழுதடைந்து உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒருவருக்கு திருமண உதவியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு படித்த இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.41 ஆயிரத்து 941-க்கான காசோலை என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.91 ஆயிரத்து 941 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story