‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 March 2022 9:34 PM IST (Updated: 28 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை சீரமைக்கப்பட்டது

சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் காங்கிரீட் சாலைகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், மாதக்கணக்கில் சீர்செய்யப்படாமல் இருப்பது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலையை உடனடியாக சீரமைத்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.


முன்எச்சரிக்கை நடவடிக்கை தேவை

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் 3-வது மெயின் ரோடு, 18-வது மத்திய குறுக்கு தெரு அருகில் உள்ள மின் இணைப்பு பெட்டியானது சில தினங்களாகவே திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் வயர்களும் வெளியே தொங்கி கொண்டும் அபாயமாக காட்சியளிக்கிறது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்வாரியம் கவனித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- இதயக்கனி, சமூக ஆர்வலர்.



பொதுமக்களின் கோரிக்கை

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பயன்பாட்டில் இருக்கும் இலவச பொது கழிப்பறைகள் நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் சில கழிப்பறைகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடாதவாறு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

- விக்னேஷ், சமூக ஆர்வலர்.

பெயர்ப்பலகை இல்லாத தெருக்கள்

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் விரிவு, காஞ்சி காமாட்சி நகர் பகுதிகளில் உள்ள சில தெருக்களில் தெரு பெயர்ப்பலகை இல்லாமல் இருக்கிறது. இப்பகுதியில் புதிதாக கூரியர் கொண்டு வரும் நபர்கள் தெரு பெயர் தெரியாமல் அங்கும் இங்குமாக அலைய வேண்டியுள்ளது. அதிகாரிகள் கவனித்து பொதுமக்களின் தேவை கருதி தெருக்களில் பெயர்ப்பலகை அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறோம்.

- ரங்கநாதன், மடிப்பாக்கம்.

குண்டும் குழியுமான சாலையின் நிலை மாறுமா?

சென்னை அடையாறு வெங்கடரத்தினம் நகர், காமராஜர் அவென்யூ 2-வது தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே இருக்கும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இந்தநிலை கடந்த சில மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. யாரும் கண்டு கொள்வதில்லை. சாலைவாசிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கும் இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- கிரி, அடையாறு.



குடிநீர் பிரச்சினை கவனிக்கப்படுமா?

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள சங்கரலிங்கனார் தெருவில் சில மாதங்களாய் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. குடிநீர் சில நாட்களில் வருவதுமில்லை, அவ்வாறு வந்தாலும் கழிவுநீர் கலந்து வருகிறது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீருக்காக இப்பகுதி மக்கள் சிரமப்பட வேண்டிய நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் தேவையை கருதி குடிநீர் பிரச்சினையை சரி செய்து தர வேண்டும்.

- கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.நகர்.


அலட்சியம் கூடாது

சென்னை திருமலை நகர் 3-வது பிரதான சாலையில் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 20 நாள் ஆகியும் அந்த பள்ளம் சீர் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அருகில் பள்ளி உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அதிக கவனத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது. எனினும் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு பொதுமக்கள் நலன் கருதி இந்த பணியை விரைந்து முடித்து தர ஆவன செய்ய வேண்டும்.

- பூபாலன், திருமலை நகர்.



இடையூறு அகற்றப்படுமா?

சென்னை எஸ்.குளத்தூர் 5-வது தெருவில் இருக்கும் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் மின்கம்பிகளின் மேல் உரசியவாறு செல்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் எப்போது வேண்டுமென்றாலும் மரத்தின் கிளைகள் மின்கம்பிகளின் மேல் விழுந்து அற்று விழும் வாய்ப்புகள் அதிகம். எனவே மின்வாரியம் கவனித்து இடையூறை விரைந்து அகற்ற வேண்டும்.

- பொதுமக்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள பழனி தெருவில் உள்ள சாலை பல மாதங்களாக சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. குழந்தைகள், முதியோர் பயன்படுத்து சாலை என்பதால் அடிக்கடி உடைந்த சாலையில் தடுக்கி நிலை தடுமாறி கீழே விழும் நிலையும் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைத்து தர மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- முரளிதரன், பெரம்பூர்.

ஏரிக்கரையில் குவியும் கழிவுகள்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் குப்பைக்கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. இது குறித்து தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. எனவே இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து குப்பைகளை கொட்டுபவர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- விஜய், ஆத்தனஞ்சேரி.





Next Story