திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல்


திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 28 March 2022 10:01 PM IST (Updated: 28 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டத்தில், முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டத்தில், முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மாநகராட்சி முதல் கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். கமிஷனர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். திருக்குறள் வாசிக்கப்பட்டு கூட்டம் தொடங்கியது.
 கூட்டத்தில் மாநகராட்சியின் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தனபாலன் (பா.ஜனதா) :- மாநகராட்சியின் பட்ஜெட்டில் ரூ.37 கோடி பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சரிசெய்ய அரசிடம் நிதி பெற வேண்டும்.
கமிஷனர்:- கொரோனா காலத்தில் வரி வசூல் பாதிக்கப்பட்டது. அதேநேரம் செலவுகள் செய்யப்பட்டன. குடிநீர், சாலை, பாதாள சாக்கடை என அடிப்படை வசதிகளுக்கு செலவு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்திய பின்னர் கூடுதல் பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இதுவும் வரிவருவாய் குறைய காரணம்.
தனபாலன் (பா.ஜனதா) :- நிதி பற்றாக்குறையை மக்கள் மீது வரியாக சுமத்தக்கூடாது. அதற்கு பதிலாக, முதல்-அமைச்சரிடம் பேசி சிறப்பு நிதி பெற வேண்டும்.
கமிஷனர்:- மாநகராட்சியின் வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மீது நேரடியாக வரி சுமத்தப்படாது. மேலும் பற்றாக்குறையை சமாளிக்க அரசிடம் நிதி கேட்கப்பட்டு இருக்கிறது.
கணேசன் (மா.கம்யூனிஸ்டு) :- கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர், சாலை உள்பட அனைத்து பணிகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது தெரியவேண்டும். இதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அ.தி.மு.க. காலத்தில் உரப்பூங்கா

தனபாலன் (பா.ஜனதா) :- அண்ணாநகரில் குடிநீர் தொட்டி அருகே கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் உரப்பூங்கா இருக்கிறது. அதன் அருகில் பள்ளி, வீடுகள் உள்ளன. உரப்பூங்காவில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே உரப்பூங்காவை பெஸ்கி கல்லூரி அருகே உள்ள இடத்துக்கு மாற்ற வேண்டும்.
ராஜப்பா (துணை மேயர்) :- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அங்கு உரப்பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லை. பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் தி.மு.க. அரசு செயல்படும். எனவே பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜ்மோகன் (அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர்) :- மாநகராட்சி அதிகாரிகள் தேர்வு செய்து கொடுத்த இடத்தில் தான் உரப்பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது.
கமிஷனர்:- உதவி பொறியாளர்கள் மூலம் பிரச்சினைகளை அறிய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அடிப்படை வசதிகள் போன்றவற்றை அவர்களிடம், கவுன்சிலர்கள் கூறலாம். 2 வார்டுகளுக்கு ஒரு உரப்பூங்கா அமைக்க வேண்டும். வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் அங்கேயே உரமாக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்காத இடம் தேர்வு செய்யப்படும்.
தனபாலன் (பா.ஜனதா) :- மேயர், துணை மேயர் ஆகியோர் உரப்பூங்காவை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும், கமிஷனர் பூசி மெழுகுவதுபோல் பேசுகிறார்.
ராஜப்பா (துணை மேயர்) :- அண்ணாநகர் உரப்பூங்காவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பஸ்நிலைய சாலை
ஜான்பீட்டர் (தி.மு.க.) :- திண்டுக்கல் பஸ்நிலைய வாகன நிறுத்துமிடத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் இலவசமாக நிறுத்த அனுமதி அளிப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல் பஸ்நிலையத்தை சுற்றிலும் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை இலவசமாக நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இளமதி (மேயர்) :- இது தொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனபாலன் (பா.ஜனதா) :- திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை சேதம் அடைந்துள்ளது. குடிநீர் வசதியும் முறையாக இல்லை.
ராஜப்பா (துணை மேயர்) :- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சாலை சேதம் அடைந்துள்ளது. சாலை உள்பட அனைத்து வசதிகளும் பஸ்நிலையத்தில் ஏற்படுத்தப்படும்.
இளமதி (மேயர்) :- திண்டுக்கல் பஸ்நிலையத்தை மேம்படுத்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.
பட்ஜெட்டில் வருவாயை மிஞ்சிய செலவு
திண்டுக்கல் மாநகராட்சியின் பட்ஜெட்டில் வருவாய் நிதியை பொறுத்தவரை 2022-2023-ம் ஆண்டின் மொத்த வருவாய் ரூ.39 கோடியே 54 லட்சத்து 25 ஆயித்து 428 ஆகும். ஆனால் மொத்த செலவு ரூ.76 கோடியே 90 லட்சத்து 71 ஆயிரத்து 926 ஆக உள்ளது. இதனால் நிதி பற்றாக்குறை ரூ.37 கோடியே 36 லட்சத்து 46 ஆயிரத்து 498 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வருவாயை மிஞ்சிய செலவாக உள்ளது.
குடிநீர் மற்றும் வடிகால் நிதி ரூ.14 கோடியே 30 லட்சத்து 1,081, செலவு ரூ.22 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 730, பற்றாக்குறை ரூ.7 கோடியே 74 லட்சத்து 88 ஆயிரத்து 649 என தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க கல்வி நிதி வருவாய் ரூ.1 கோடியே 81 லட்சத்து 48 ஆயிரத்து 894-ம், செலவு ரூ.56 லட்சத்து 67 ஆயிரத்து 531-ம், உபரிநிதி இருப்பு ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 363 என கூறப்பட்டுள்ளது.

Next Story