பொது வேலைநிறுத்தம் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் 95 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பொதுவேலை நிறுத்தம் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 95 சதவீதம் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
கள்ளக்குறிச்சி,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2 நாட்கள் நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் தொடங்கினர். போராட்டத்தில் முதல் நாளான நேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 95 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. சுமார் 5 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயங்கியதால், பொது போக்குவரத்தை நம்பி இருந்த நகர்ப்புறம் தொடங்கி கிராமப்புற மக்கள் வரை அனைவரும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி நகரை பொறுத்தவரை 2 பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து மொத்தம் 99 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் நேற்று மதியம் வரைக்கும் 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பொதுபோக்குவரத்து பாதிப்பு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. அதே நேரத்தில், தனியார் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டது. இதிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மாவட்டத்தில் பிறபகுதிகள்
இதேபோன்று, மாவட்டத்தில் பிறபகுதியான உளுந்தூர்பேட்டை பணிமனையில் மொத்தம் 48 பஸ்கள் உள்ளது. இதில் 6 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
மேலும் சங்கராபுரம் பணிமனையில் மொத்தம் உள்ள 43 பஸ்களில், மாலையில் இருந்து 5 பஸ்களும், சின்னசேலம் பணிமனையில் மொத்தம் உள்ள 36 பஸ்களில் 3 பஸ்களும் இயக்கப்பட்டது.
மேலும் திருக்கோவிலூர் அரசு பணிமனையில் மொத்தம் 55 அரசு பஸ்கள் உள்ளது. இதில் ஒரு பஸ்களும் இயக்கப்படவில்லை.
போலீஸ் பாதுகாப்பு
இந்த வேலை நிறுத்தத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின.
தொழிற்சங்கங்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story