பழனி நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் தர்ணா


பழனி நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் தர்ணா
x
தினத்தந்தி 28 March 2022 10:07 PM IST (Updated: 28 March 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

பழனி நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி:
பழனி பஸ்நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை, பொருட்கள் வைப்பறை, தினசரி சந்தை மற்றும் கமிஷன் மண்டிகளில் வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள முன்வைப்பு தொகை செலுத்தி விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும்.
இந்தநிலையில் ஏலத்துக்கு விண்ணப்பிக்க அனுமதி மறுப்பதாக கூறி, அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட அந்த கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
பின்னர் நகராட்சி சார்பில் மேற்கண்ட 3 உரிமங்களுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story