வார்டு குழு தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்


வார்டு குழு தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்
x
தினத்தந்தி 28 March 2022 7:53 PM GMT (Updated: 28 March 2022 7:53 PM GMT)

வார்டு குழு தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்

திருச்சி, மார்ச்.29-
திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களையும் மறுவரையறை செய்து 5 மண்டலங்களாக பிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, ஒரு மண்டலத்திற்கு 13 வார்டுகள் வீதம் பிரிக்கப்பட்டு புதிதாக 5 மண்டலங்களாக (வார்டு குழு) உருவெடுத்தன. இந்தநிலையில் வார்டு குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சி கமிஷனரும், மாநகராட்சி தேர்தல் அலுவலருமான முஜிபுர்ரகுமான் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி வார்டு குழு தலைவர்களுக்கான தேர்தல், நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கவுள்ளது. அன்று மதியம் 2:30 மணிக்கு, நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான, மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில், கணக்கு குழு, பொது சுகாதார குழு, கல்விக்குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு, பணிகள் குழு என 6 குழுக்களுக்கும் தலா 9 உறுப்பினர்கள் வீதம் 54 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவற்றில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு என்பதால், 9 பேர் கொண்ட ஒரு குழுவில் தலா 5 இடம் பெண் கவுன்சிலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த குழுக்களில்தேர்ந்தெடுக்கப்படவுள்ள 54 கவுன்சிலர்களில், 30 பேர் பெண்களாக இருப்பார்கள். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு, மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் இக்குழுவின் உறுப்பினராக ஒரு கவுன்சிலர் மட்டும் தேர்வு செய்யப்படுவார். அன்று மதியம் 2.30 மணிக்கு, 6 நிலைக்குழுக்களுக்கான தலைவர்கள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story