தி.மு.க., அ.தி.மு.க. தலா 2 இடங்களில் வெற்றி


தி.மு.க., அ.தி.மு.க. தலா 2 இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 30 March 2022 3:48 PM GMT (Updated: 30 March 2022 3:48 PM GMT)

ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 2 இடங்களில் வெற்றி பெற்றது.

ஓசூர்:-
ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 2 இடங்களில் வெற்றி பெற்றது.
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 21 வார்டுகளிலும், அ.தி.மு.க. 16 வார்டுகளிலும் வெற்றிபெற்றன. இதுதவிர பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க. தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதற்கிடையே பா.ம.க. கவுன்சிலர் மற்றும் சுயேச்சைகள் 4 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் காங்கிரசில் சேர்ந்தார்.
இதையடுத்து மாநகராட்சியில் தி.மு.க. பலம் அதிகரித்தது. அந்த கட்சியை சேர்ந்த எஸ்.ஏ.சத்யா மேயராகவும், துணை மேயராக சி.ஆனந்தய்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டல தலைவர்கள் தேர்தல்
இந்த நிலையில் மண்டல தலைவர்களுக்கான தேர்தல் மாநகராட்சி கூட்ட அரங்கில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 45 கவுன்சிலர்களில் 44 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். 43-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவுசியா பானு தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. இவர் சுயேச்சையாக வெற்றி பெற்று தி.மு.க.வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 முதல் 11 வார்டுகள் அடங்கிய 1-வது மண்டலத்தில் தி.மு.க. சார்பில் ரவி (5-வது வார்டு கவுன்சிலர்) போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக ரஜினிகாந்த் (3-வது வார்டு) போட்டியிட்டார். இதில் ரவி 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரஜினிகாந்துக்கு 4 வாக்குகள் கிடைத்தது.
12-வது வார்டு முதல் 23-வது வார்டு வரை அடங்கிய 2-வது மண்டலத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காந்திமதி கண்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநகராட்சி தேர்தலில் 16-வது வார்டில் பா.ம.க. சார்பில் வென்று பின்னர் தி.மு.க.வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. வெற்றி
24-வது வார்டு முதல் 33-வது வார்டு வரை கொண்ட 3-வது மண்டல தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் புருஷோத்தம ரெட்டி (28-வது வார்டு) போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் 24-வது வார்டு கவுன்சிலர் மஞ்சம்மா போட்டியிட்டார். இதில் புருஷோத்தமரெட்டி 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மஞ்சம்மாவிற்கு 3 வாக்குகள் கிடைத்தன.
34-வது வார்டு முதல் 45-வது வார்டு வரையிலான 4-வது மண்டல தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் 42-வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ், தி.மு.க சார்பில் சென்னீரப்பா (37-வது வார்டு) போட்டியிட்டனர். இதில் ஜெயப்பிரகாஷ் 7 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். சென்னீரப்பாவிற்கு 4 வாக்குகள் கிடைத்தது.
வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மண்டல தலைவர்களுக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் அ.தி.மு.க. மண்டல தலைவர்களுக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி, மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.மதன், ஓசூர் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன், அக்ரோ தலைவர் ஹரி மற்றும் அசோகா, சிவராம், மஞ்சுநாத், கிருஷ்ணவேணி ராஜி, குபேரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் 4 மண்டல தலைவர்களுக்கும் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story