6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது


6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 12:06 AM IST (Updated: 1 April 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

திருச்சி, ஏப்.1-
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூங்குடி மூலை வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1½ அடி உயரம் ஐம்பொன் விநாயகர் சிலை கடந்த 2016-ம் ஆண்டு திருட்டுப்போனது.
இது தொடர்பாக எரவாஞ்சேரி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதே வேளையில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் அகிலன் என்ற தங்கவேல் (வயது 25) என்பவர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். சாமி சிலை திருட்டு வழக்குகளின் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யும்படி சிலைதிருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி.ஜெயந்த்முரளி மற்றும் ஐ.ஜி. தினகரன் உத்தரவுப்படி கும்பகோணம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு முக்கிய குற்றவாளியான அகிலன் என்ற தங்கவேலை நேற்று பேராளம் அருகிலுள்ள கொல்லுமாங்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு விரைந்த இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தங்கவேலை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தங்கவேல், திருவாரூர் மாவட்டத்தில் மேலும் ஒரு சிலைத்திருட்டு வழக்கில் தொடர்புடையவராவார். கைதான அவர், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story