துலுக்கர்பட்டி முதற்கட்ட அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
வள்ளியூர் அருகே, துலுக்கர்பட்டியில் நடந்த முதற்கட்ட அகழாய்வு பணியில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே, துலுக்கர்பட்டியில் நடந்த முதற்கட்ட அகழாய்வு பணியில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
அகழாய்வு பணி
தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரீகம் பழமை வாய்ந்தது என்பதை உலகறியச் செய்யும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டு, பணிகள் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்றுப் படுகையிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்தது.
நிதி ஒதுக்கீடு
இதனைத்தொடர்ந்து கடந்த 16-ந்தேதி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்ட அகழாய்வு பணியை தொடங்கி வைத்தனர். அகழாய்வு பணிக்காக அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் தமிழ் மொழியின் நாகரீகம் பழங்காலம் தொட்டு நிலவியதற்கான சான்றுகள் உள்ளனவா? எனவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பழங்கால பொருட்கள்
காலை முதல் மாலை வரை பணியாளர்கள் அந்த இடத்தில் வேலை செய்து வருகிறார்கள். அதை மேற்பார்வையிடுவதற்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று முன்தினமும், நேற்றும் நம்பியாற்றின் நதிக்கரைப்பகுதியில் அகழாய்வு பணி நடைபெற்றது. அப்போது அங்கு தோண்டி எடுக்கப்பட்டதில், பழங்கால மக்கள் பயன்படுத்திய மண் ஓடுகள், குவளை, பாசி, மணிகள், வட்டக்கல் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை ஊழியர்கள் சேகரித்து வைத்தனர்.
அந்த பொருட்களை தனித்தனியாக பிரித்து தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அகழாய்வின்போது தினமும் கிடைக்கும் பழங்கால பொருட்கள் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story