போலீசார் 40 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் சந்திப்பு


போலீசார் 40 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் சந்திப்பு
x
தினத்தந்தி 1 April 2022 1:06 AM IST (Updated: 1 April 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் 40 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் சந்திப்பு

திருச்சி, ஏப்.1-
திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி உள்ளது. இங்கு கடந்த 1981-82-ம் ஆண்டு 120 பேர் போலீசாராக பணியில் சேர்ந்தனர். அவர்களில் பலர் சப்-இன்ஸ்பெக்டர் வரை பதவி உயர்வு பெற்று, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றுவிட்டனர். இதில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்பட 7 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இந்தநிலையில், 40 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி, திருச்சி மத்திய பஸ்நிலைய பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணி (1981-82) நண்பர்கள் குழு தலைவரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜா தலைமை தாங்கினார். முடிமன்னன் முன்னிலை வகித்தார். திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் சக்திவேல், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணி தளவாய் எம். ஆனந்தன், திருச்சி நவல்பட்டு காவலர் பயிற்சிப்பள்ளி முதல்வர் கோவிந்தசாமி, ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க தலைவர் நல்லசங்கி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
இதில் கடந்த 1981-82-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்த 90 பேர் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். அவர்கள், தாங்கள் பணியில் சோ்ந்து, முதலாம் அணியில் பணியாற்றிய போது நடந்த நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story