மயக்க மருந்து தெளித்து அழகு நிலைய உரிமையாளரிடம் 9¼ பவுன் நகை அபேஸ்


மயக்க மருந்து தெளித்து அழகு நிலைய உரிமையாளரிடம் 9¼ பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 1 April 2022 1:12 AM IST (Updated: 1 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் பேஷியல் செய்வது போல் நடித்து மயக்க மருந்து தெளித்து அழகு நிலைய உரிமையாளரிடம் 9¼ பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற இளம் பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் குமரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவருடைய மனைவி சுதா (வயது 36). இவர் கடலூர் இம்பீரியல் சாலையில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இந்த அழகு நிலையத்துக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். பின்னர் அவர் அங்கு பேஷியல் செய்து கொண்டார். அப்போது அந்த பெண் சுதாவிடம் பேச்சு கொடுத்தார். இதில் உங்களது தொழிலுக்கு நான் பல உதவிகளை செய்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதனை நம்பிய அழகு நிலைய உரிமையாளர் சுதா, அந்த பெண்ணை கடலூர் முதுநகர் குமரன் கோவில் தெருவில் உள்ள தனது மற்றொரு அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றார். 

மயக்க மருந்து

அப்போது அந்த பெண் அருகில் இருந்த கடைக்கு சென்று 2 குளிர்பானங்களை வாங்கினார். அதனை 2 பேரும் அழகுநிலையத்தில் வைத்து குடித்தனர். இந்தநிலையில் அந்த பெண் தான் குடித்து கொண்டிருந்த குளிர்பானத்தை கீழே கொட்டியதாக தெரிகிறது. இதைபார்த்த சுதா அதனை அகற்றி சுத்தம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சுதாவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்ததாக தெரிகிறது.  இதில் சுதா அங்கேயே மயங்கி விழுந்தார். 

பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 9¼ பவுன் நகையை காணவில்லை. அதனை அந்த மர்ம பெண் அபேஸ் செய்து சென்றது தெரிந்தது. அதன்மதிப்பு சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேஷியல் செய்வது போல் நடித்து நகையை அபேஸ் செய்து  சென்ற இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story