பெரம்பலூர் நகராட்சியின் முதல் கூட்டம்


பெரம்பலூர் நகராட்சியின் முதல் கூட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 2:16 AM IST (Updated: 1 April 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சியின் முதல் கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சியின் முதல் கூட்டமான சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து பேசினர். அப்போது, காவிரி குடிநீர் வினியோகிக்கும் பகுதிகளில் கிணற்று தண்ணீரும் குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. காவிரி நீரை மட்டும் வினியோகிக்க வேண்டும். வார்டுகளுக்கு தூய்மை பணியாளர்களை அதிகளவு நியமிக்க வேண்டும். தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ள பகுதிகளில், அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும். ஆலம்பாடி ரோடு திருநகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மழைநீர் வடிகால், நகராட்சி வடிகாலுடன் இணைக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமங்கலம் நெடுஞ்சாலை பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும். சங்குப்பேட்டை பகுதியில் முறையாக காவிரி குடிநீர் வினியோகிக்க வேண்டும். கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த நகராட்சி தலைவர், ஆணையர், துணைத் தலைவர் ஆகியோர் உரிய நடிவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக கூட்டத்தில், நகராட்சியில் சில பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டதற்கு கவுன்சிலர்களிடம் அனுமதி பெறப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டண கழிவறையில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், பழைய பஸ் நிலையம் தினசரி சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமத்துக்கும் ஏலம் விடப்பட்டதற்கு அனுமதி பெறப்பட்டது. இதேபோல் 1 முதல் 21 வார்டுகள் வரை ஆள் இறங்கும் தொட்டிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கும், சாலைகளின் மட்டத்திற்கு தாழ்வாக உள்ள ஆள் இறங்கும் தொட்டிகளை உயர்த்தும் பணிகளுக்கும் பாதாள சாக்கடை நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதீப்பிடு செய்யப்பட்டதற்கு அனுமதி பெறப்பட்டது.

Next Story