சேலத்தில் 90 டன் கற்கள் பறிமுதல்
சேலத்தில் கரட்டு பகுதியில் கடத்த முயன்ற 90 டன் கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சூரமங்கலம்,
கனிம வளங்கள்
சேலம் மாவட்டத்தில் ஏராளமான மலைப்பகுதிகள் உள்ளன. மேலும் பல்வேறு கரடுகளும் காணப்படுகின்றன. இந்த பகுதிகளில் கற்கள் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் உள்ளன. இந்த கனிம வளங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள கரட்டு பகுதியில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி தலைமையில் மேற்கு தாசில்தார் தமிழரசி, போலீஸ் உதவி கமிஷனர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கரட்டு பகுதிக்கு திடீரென்று சென்று சோதனை நடத்தினர்.
கற்கள் பறிமுதல்
அங்கு கடத்துவதற்கு தயார் நிலையில் மூட்டைகளில் கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அங்கிருந்த 90 டன் கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக கற்களை வெட்டி கடத்த முயன்றது யார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்களை கடத்த முயன்ற கும்பலை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story