சித்தகங்கா மடத்தில் ராகுல் காந்தி நேரில் மரியாதை;மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கும் ஆறுதல்
சிவக்குமார சுவாமியின் ஜெயந்தியையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அவர் நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பெங்களூரு: சிவக்குமார சுவாமியின் ஜெயந்தியையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அவர் நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
குரு வந்தனா நிகழ்ச்சி
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்களின் கவனம் கர்நாடகம் பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்த மறைந்த சிவக்குமார சுவாமியின் ஜெயந்தி அதாவது குரு வந்தனா (குருவுக்கு மரியாதை செலுத்துதல்) நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்வதாக இருந்தது. அமித்ஷா, ராகுல் காந்தி அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பதால் இதில் ஒரே நேரத்தில் இரு தலைவர்களும் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கருதினார்.
இதையடுத்து அவர் கூறிய ஆலோசனையின்படி ராகுல் காந்தி ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது நேற்று கர்நாடகம் வந்தார். அவர் சித்தகங்கா மடத்திற்கு வந்து அங்கு சிவக்குமார சுவாமியின் சிலையின் முன்னால் அமர்ந்து மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அப்போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர். அந்த மடத்தில் ராகுல் காந்தியை மடாதிபதி சித்தலிங்க மகாசுவாமி வரவேற்று அழைத்து சென்றார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு அந்த மடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக பகல் 1 மணியளவில் ராகுல் காந்தி விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் ராகுல் காந்தி அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அவரை சித்தராமையா தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ராகுல் காந்தி காரில் துமகூருவுக்கு புறப்பட்டு சென்றார்.
துமகூருவுக்கு செல்லும் வழியில் தொட்டபள்ளாபுராவில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய ராகுல் காந்தி தொண்டர்களை பார்த்து உற்சாகம் பொங்க கை அசைத்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
புனித் ராஜ்குமார்
துமகூருவில் இருந்து மீண்டும் பெங்களூருவுக்கு வந்த அவர் இரவு 8.15 மணியளவில் சதாசிவநகரில் உள்ள நடிகர் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி, புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போதும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story