கழுத்தை நெரித்து விவசாயி கொலை; அண்ணன் மகன்கள் 2 பேர் கைது
குண்டலுபேட்டை அருகே கழுத்தை நெரித்து விவசாயியை கொன்ற அண்ணன் மகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் தீர்த்து கட்டி தற்கொலை நாடகமாடியது அம்பலமானது.
கொள்ளேகால்: குண்டலுபேட்டை அருகே கழுத்தை நெரித்து விவசாயியை கொன்ற அண்ணன் மகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் தீர்த்து கட்டி தற்கொலை நாடகமாடியது அம்பலமானது.
தூக்கில் தொங்கிய நிலையில்...
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கரகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ்(வயது 55). விவசாயியான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரை, குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தனர். நேற்றுமுன்தினம் ஹசகோலி கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நாகேஷ் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். விசாரணையில், நாகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது அண்ணன் மகன்களான ஸ்ரீநிதி, சீனிவாஸ் தெரிவித்தனர்.
அண்ணன் மகன்கள் கைது
இதையடுத்து நாகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் நாகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே நாகேசின் அண்ணன் மகன்களான ஸ்ரீநிதி, சீனிவாஸ் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சொத்துத்தகராறில்...
அதாவது விவசாயி நாகேசுக்கும், அண்ணன் மகன்களான ஸ்ரீநிதி, சீனிவாசுக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் சம்பவத்தன்றும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும், சித்தப்பா என்றும் பாராமல் நாகேசை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை மரத்தில் தொங்கவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியது தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் பேலூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story