மந்திரி ஈசுவரப்பா மீது வழக்கு
மந்திரி ஈசுவரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு: சிவமொக்கா மாவட்டம் தொட்டபேட்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பஜ்ரங்தள அமைப்பின் பிரமுகரான ஹர்ஷா கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா, இந்து அமைப்பை சேர்ந்த ஹர்ஷாவை முஸ்லிம் வாலிபர்கள் தான் கொலை செய்திருப்பதாக பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார். இதுபோல், சிவமொக்கா மாநகராட்சி உறுப்பினரான சென்னபசப்பாவும், இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, ஹர்ஷா கொலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும், பகிரங்கமாகவும் கருத்து கூறிய மந்திரி ஈசுவரப்பா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மந்திரி ஈசுவரப்பா, மாநகராட்சி உறுப்பினர் சென்னபசப்பா மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி தொட்டபேட்டே போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story