பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய ஆணையம்
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய ஆணையம் அமைக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய ஆணையம் அமைக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்
கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் 2-வது முறையாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.
இதில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி, கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, நகர வளர்ச்சி மந்திரி பைரதி பசவராஜ், சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, நகரசபை நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ், தலைமை செயலாளர் ரவிக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம் (எஸ்) குழு துணைத்தலைவர், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் பிற்படுத்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது குறித்து ஆராய ஒரு ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரமாண பத்திரம்
மராட்டிய மாநிலம் தொடர்பான ஒரு வழக்கில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து உள்பட உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. அரசியல் ரீதியாக பின்தங்கியுள்ள சமூகங்கள் குறித்து ஆராய்ந்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் தகுதியான சமூகங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காண ஒரு கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு அளவை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதுகுறித்து சட்ட ஆலோசனை வழங்குமாறு அட்வகேட் ஜெனரலிடம் கூறியுள்ளோம். இந்த அறிக்கை வந்த பிறகு இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுப்போம். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு தேர்தலை நடத்துவோம். பிற்படுத்தப்பட்ட சமூகங்களை புறக்கணித்துவிட்டு தேர்தலை நடத்த அரசு விரும்பவில்லை. கமிஷன் அறிக்கை வரும் வரை மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்துவதில் சிறிது காலதாமதம் ஆகும்.
இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.
Related Tags :
Next Story