சேலம் மாநகராட்சியில் 6 நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு நியமனக்குழு உறுப்பினரும் தேர்வு
சேலம் மாநகராட்சியில் 6 நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நியமனக்குழு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேலம்,
நிலைக்குழு தலைவர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் 4 மண்டல குழு தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள 6 நிலைக்குழு தலைவர்கள் தேர்ந்து எடுப்பதற்காக மறைமுக தேர்தல் நேற்று மதியம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடம் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
போட்டியின்றி தேர்வு
அதன்படி கணக்கு குழு தலைவர் பதவிக்கு மஞ்சுளா (40-வது வார்டு), கல்விக்குழு தலைவர் பதவிக்கு முருகன் (59-வது வார்டு), பொது சுகாதாரக்குழு தலைவர் பதவிக்கு சரவணன் (56-வது வார்டு), வரி மற்றும் நிதிக்குழு தலைவர் பதவிக்கு குமரவேல் (3-வது வார்டு), நகரமைப்புக்குழு தலைவர் பதவிக்கு ஜெயக்குமார் (28-வது வார்டு), பணிகள் குழு தலைவர் பதவிக்கு சாந்தமூர்த்தி (14-வது வார்டு) ஆகியோர் தி.மு.க.சார்பில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை. எனவே தி.மு.க. கவன்சிலர்கள் 6 பேரும் போட்டியின்றி ஒரு மனதாக நிலைக்குழு தலைவர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக நேற்று காலை நடைபெற்ற மறைமுக தேர்தலில் நியமனக்குழு உறுப்பினராக தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன் (1-வது வார்டு) ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து மேயர் ராமச்சந்திரன் முன்னிலையில், ஆணையாளர் கிறிஸ்துராஜ் 6 நிலைக்குழு தலைவர்கள் மற்றும் ஒரு நியமனக்குழு உறுப்பினர் ஆகியோருக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார். இதில் துணை மேயர் சாரதாதேவி மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story