தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் கன்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
கல்லூரி மாணவர் பலி
செங்குன்றம் அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர். இவரது மகன் முகமது யாசிம்(வயது 21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்து வழக்கம் போல் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ், மதுரவாயல் அருகே சென்ற போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், முகமதுயாசிம் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி சாலை தடுப்பு சுவர் மீது ஏறி எதிர் திசையில் உள்ள சாலையின் குறுக்கே நின்றது. இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து போன முகமது யாசிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காயமடைந்த அவரது நண்பரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததையைடுத்து, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story