100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி பொதுமக்கள் சாலை மறியல்


100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 April 2022 7:18 PM IST (Updated: 1 April 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தெக்குப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தெக்குப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முறைகேடு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெக்குப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரின் இருக்கையில், அவரது கணவர் அமர்ந்துகொண்டு நிர்வாகத்தை நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மணல் கடத்தல், மண் கடத்தலை தடுக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

சாலை மறியல்

இதனை கண்டித்து, தெக்குப்பட்டு- புத்துக்கோவில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ரகுகுமார் மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 100 நாள் வேலை திட்ட அட்டைகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story