கோவில் உண்டியல்- 6 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
நாகையில் ஒரே நாளில் கோவில் உண்டியல்- 6 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் கடைகளில் இருந்து நாட்டுக்கோழிகள்- வாழைத்தாரையும் எடுத்து சென்றனர்.
வெளிப்பாளையம்:
நாகையில் ஒரே நாளில் கோவில் உண்டியல்- 6 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் கடைகளில் இருந்து நாட்டுக்கோழிகள்- வாழைத்தாரையும் எடுத்து சென்றனர்.
கடைகளின் பூட்டு உடைந்து கிடந்தது
நாகை அண்ணாசிலை அருகே பாரதி மார்க்கெட் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மீன்கடை, இறைச்சிக்கடை மற்றும் காய்கறி கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்தனர். அப்போது 2 இறைச்சி கடைகள், ஒரு காய்கறிகடை, 2 மளிகை கடை உள்ளிட்ட 6 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பணம், நாட்டுக்கோழிகள் திருட்டு
பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டிகளில் இருந்த பணத்தையும், இறைச்சி கடைகளில் இருந்த நாட்டுக்கோழிகளையும்,, கறிவெட்டும் கத்தி மற்றும் பெட்டிக்கடையில் இருந்த வாழைத்தார், சிகரெட் பாக்கெட்டுகளையும் திருடி சென்றுவிட்டனர். 6 கடைகளில் மொத்தம் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர்.
மேலும் அங்குள்ள முனீஸ்வரன் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தில் இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
வியாபாரிகள் அச்சம்
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகையில் ஒரே நாளில் கோவில் உண்டியல் மற்றும் 6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நாட்டுக்கோழி, வாழைத்தார் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story