அரசு பஸ் மோதி வாலிபர் சாவு மற்றொருவர் படுகாயம்
சீர்காழி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி, ஏப்.2-
சீர்காழி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலிபர் பலி
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த அரசு பஸ், சீர்காழி அருகே உள்ள அண்ணன்பெருமாள் கோவில் கிராமம் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கரன் (வயது 25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிவபால் சிங் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த சிவபால் சிங்கை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், சீர்காழி-நாகப்பட்டினம் சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
தகவலறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சாலையில் வேகத்தடை அல்லது தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
டிரைவர் கைது
பின்னர் உயிரிழந்த பாஸ்கரன் உடலை ேபாலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (53) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story