தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி ஆணைக்குப்பம் ஊராட்சி தென்னஞ்சார் கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குண்டும், குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், நன்னிலம்.
ஆபத்தான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதி பரவக்கரை கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கிப்பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.மேலும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தொட்டி உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பரவக்கரை.
மாற்றுப்பாதை வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவை அடுத்த பிராந்தியங்கரை வழியாக திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் செல்லும் இணைப்பு சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் பகுதிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் கட்டும் பணி நிறைவடையும் வரை தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-கவுதமன், பிராந்தியங்கரை.
Related Tags :
Next Story