உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மீது எந்த அதிருப்தியும் இல்லை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 1 April 2022 11:39 PM IST (Updated: 1 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி மீது எந்த அதிருப்தியும் இல்லை என உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்து உள்ளார்.

மும்பை, 
உள்துறை மந்திரி மீது எந்த அதிருப்தியும் இல்லை என உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்து உள்ளார்.
உள்துறை மந்திரி விவகாரம்
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக உள்ள போதும் நிதி, உள்துறை போன்ற முக்கிய இலாக்காக்கள் தேசியவாத காங்கிரஸ் வசமே உள்ளது. இந்தநிலையில் சிவசேனா, உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மீது அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக திலீப் வால்சே பாட்டீல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும், இதனால் சிவசேனா உள்துறையை தேசியவாத காங்கிரசிடம் இருந்து பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த விவகாரத்தால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே இன்று உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலும், வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தவ் தாக்கரே விளக்கம்
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மீது எந்த அதிருப்தியிலும் இல்லை. இது தொடர்பான செய்திகள் தவறானவை, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. என் மந்திரிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.   
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story