திருநங்கைகளுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
திருநங்கைகளுக்கு சமஉரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
திருநங்கைகளுக்கு சமஉரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
அங்கீகரிப்பு நாள் விழா
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய உலக திருநங்கைகள் அங்கீகரிப்பு நாள் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, திருநங்கைகள் பங்கேற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருநங்கைகள் இன்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக பிரித்திகா யாஷினி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், சில திருநங்கைகள் கல்லூரி முதல்வராகவும், நீதிபதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், ராணுவத்திலும், மருத்துவத் துறையிலும் சாதித்து வருகிறார்கள். திருநங்கைகளும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான். அவர்களுக்கும் வாழ்வதற்கு ஒரு இடம் தேவை. அவர்களுக்கும் பொருளாதாரத்தில் பல பிரச்சினைகள் உள்ளது.
சம உரிமை
ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரை வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அதற்கான வழிவகை மேற்கொள்ளப்படும். திருநங்கைகளுக்கான தொழில், பொருளாதார மேம்பாடு, சமூக மரியாதை, சம உரிமை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறவுகளும் அவர்களுடைய உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும். திருநங்கைகளின் பொருளாதார நிலை மேம்படுமேயானால் அவர்களும் சமுதாயத்தில் சுயமரியாதையோடு வாழ முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டை, மாவட்டத்திலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கு சுய தொழில் செய்ய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான ஆவணம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தி ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story