மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 April 2022 12:16 AM IST (Updated: 2 April 2022 5:20 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை டவுன்ஹால் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமினை  கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் குழந்தை நல சிறப்பு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர், பொது நல மருத்துவர், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர், பல் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவ குழுக்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர். இதில் இலவசமாக மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் மாணவர்களின் பேச்சு திறன், எழுத்து திறன் ஆகியவற்றை சோதனை செய்து அவர்களிடம் உரையாற்றினார். தொடர்ந்து 142 மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார். முகாமில் முடநீக்கியல் மருத்துவர் சதீஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அரவிந்தன், கண் மருத்துவர் கவுரி, மன நல மருத்துவர் வித்யாலட்சுமி, குழந்தை நல மருத்துவர் ராஜசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மருத்துவர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி வரை தொடர்ந்து ஒவ்வொரு வட்டவள மையத்திலும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் தனித்தனியாக நடைபெற உள்ளது.

Next Story