நெல்லையில் டீ, காபி விலை உயர்ந்தது


நெல்லையில் டீ, காபி விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 1 April 2022 7:33 PM GMT (Updated: 1 April 2022 7:33 PM GMT)

கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பின் எதிரொலியாக நெல்லையில் டீ, காபி விலை உயர்ந்தது.

நெல்லை:
கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பின் எதிரொலியாக நெல்லையில் டீ, காபி விலை உயர்ந்தது.

விலை உயர்வு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தினமும் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த விலை உயர்வு எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்ததால் வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்தனர்.

டீ, காபி

அதன்படி, நெல்லை மாநகர பகுதியில் உள்ள டீக்கடைகளில் நேற்று டீ, காபி விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. டீ, காபி, கருப்பட்டி காபி, கருப்பட்டி டீ, நாட்டு சர்க்கரை டீ, காபி ஆகியவை திடீரென விலை உயர்த்தப்பட்டுள்ளது.

10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீ, நேற்று 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது டீ விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு காபி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது நேற்று முதல் ரூ.3 அதிகரித்து ரூ.13-க்கு விற்பனையானது.

அறிவிப்பு பலகை

12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கருப்பட்டி காபி, டீ, நாட்டு சக்கரை டீ, காபி ஆகியவை 3 ரூபாய் விலை உயர்ந்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பார்சல் டீ மற்றும் காபி 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 35 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு குறித்து டீக்கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

விலை உயர்வு ஏன்?

இதுகுறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வால் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் டீ, காபி ஆகியவற்றிற்கு விலை உயர்த்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலையை உயர்த்தி உள்ளோம். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம், என்றார்.

Next Story