‘சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்’-வாகன ஓட்டிகள் கோரிக்கை
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருப்புவனம்,
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சுங்க கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மதுரை-ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.
திருப்புவனத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுனர் விஜயகுமார் கூறும் போது:-
ஏற்கனவே டீசல் விலை கூடிக்கொண்டே செல்கிறது. தற்சமயம் டோல்கேட் வரியையும் அதிகமாக்கி உள்ளனர். இதேபோல் வாகனத்தை தகுதிச் சான்று பெற கொண்டு செல்லும் போதும் செலவு அதிகரிக்கிறது. இதனால் பயணிகளிடம் கூடுதல் வாடகை கேட்கும்போது பயணிகள் தர மறுக்கிறார்கள். நாங்கள் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அரசு பெட்ரோல், டீசல் விலையையும், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.
திரும்ப பெற வேண்டும்
மானாமதுரை-திருமயம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி செம்பகம்பேட்டையில் உள்ளது. அந்த வழியாக சென்ற காரைக்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறும் போது, தற்போது தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதி வேகமாக கடந்த காலங்களில் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் நேற்று முதல் உயர்ந்து உள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்து உள்ளதால் சரக்கு வாகனங்களின் வாடகையும் அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும். எனவே சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story