குண்டும், குழியுமான மயான பாதையில் தார் சாலை அமைக்க கோரிக்கை
குண்டும், குழியுமான மயான பாதையில் தார் சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தா.பழூர்:
மயான சாலை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூத்தங்குடி கிராம மக்களுக்கான மயானம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து, இடையில் இருக்கும் சிறு பாலங்கள் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கூத்தங்குடி தெரு சாலையில் இருந்து மயானம் செல்லும் சாலை வரை சுமார் 750 மீட்டர் தூரம் மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிறது.
அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலை மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது. அதன்பிறகு மயான சாலை சீரமைக்கப்படாமலும் தார் சாலையாக தரம் உயர்த்தப்படாமலும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அந்த சாலையில் 2 இடங்களில் பொன்னார் பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் இரண்டாம் எண் வாய்க்கால் குறுக்கிடுகிறது. அந்த இடங்களில் 2 சிறு பாலங்கள் அமைக்க வேண்டும்.
விவசாயிகளும் பயன்படுத்துகிறார்கள்
இதேபோல் இரண்டாம் எண் வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு செல்லும் கிளை வாய்க்கால் ஒன்று குறுக்கிடுவதால், அதில் ஒரு சிறு பாலம் அமைக்க வேண்டும். பின்னர் அந்த சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த சாலையையொட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் வயல்கள் உள்ளன. இந்த வயல்களில் உற்பத்தி செய்யப்படும் நெல் மூட்டைகள் இந்த சாலை வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயத்திற்கு தேவைப்படும் உர மூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல விவசாயிகள் இந்த சாலையையே பயன்படுத்துகிறார்கள். எனவே மயான சாலையை பாலங்கள் அமைத்து தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story