ஆயுதங்களுடன் காரில் வந்த வாலிபர் கைது


ஆயுதங்களுடன் காரில் வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2022 2:03 AM IST (Updated: 2 April 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் நடந்த வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் காரில் வந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்;
பட்டுக்கோட்டையில் நடந்த வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் காரில் வந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு வழக்குகள்
பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு-வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் மன்னார் என்கிற அருண்சந்தர் (வயது32). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஒரு வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தபோது, ராஜாமடம் அக்னி ஆற்றுப்பால பகுதியில் அருண்சந்தர் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரின் வருகையை அறிந்த அருண்சந்தர் தப்பி செல்வதற்காக பாலத்தில் இருந்து குதித்தபோது அவரது வலதுகால் முறிந்தது.
கோர்ட்டு பிடிவாரண்டு
இதையடுத்து அவரை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் மீண்டும் அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்தபோதே ஏற்கனவே கைதான வழக்கில் அருண்சந்தருக்கு ஜாமீன் கிடைத்தது. இருந்தாலும் 2 வழக்குகளில் கோர்ட்டு பிடிவாரண்டு இருந்து வந்ததால் அவரை கைது செய்வதற்கு போலீசார் தயாரானார்கள்.
மேலும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஜார்ஜ் கொடுக்க வேண்டாம் எனவும் டாக்டர்களிடம் போலீசார் தெரிவித்து இருந்தனர். தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என நினைத்த அருண்சந்தர் ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாரின் கண்காணிப்பை மீறி சென்றுவிட்டார்.
வாகனசோதனையில் சிக்கினார்
இந்தநிலையில் பட்டுக்கோட்டை பெருமாள்கோவில் பகுதியில் பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தபோது, காரில் அருண்சந்தர் இருந்தார். மேலும் கூர்மையான ஆயுதங்களும் காரில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் அருண்சந்தரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்த 2 வழக்குகளிலும் அவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ஆஸ்பத்திரியில் இருந்து அருண்சந்தர் வெளியே சென்றதை தடுக்க தவறியதாக 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story