ஈரோடு மாவட்டத்தில் தினமும் ஆவின் மூலம் 72 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்; பொது மேலாளர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் தினமும் ஆவின் மூலம் 72 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்; பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 2 April 2022 2:31 AM IST (Updated: 2 April 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஆவின் மூலம் தினமும் 72 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக ஈரோடு ஆவின் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஆவின் மூலம் தினமும் 72 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக ஈரோடு ஆவின் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
72 ஆயிரம் லிட்டர்
ஈரோடு ஆவின் நிர்வாகம் தயாரிக்கும் இனிப்பு, கார வகைகளின் உற்பத்தி, விற்பனை ஆகியவை கடந்த தீபாவளி முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் அட்டை மூலம் 25 ஆயிரத்து 91 கறவையாளர்களின் மனுக்கள் பெறப்பட்டு, வங்கிக்கு அனுப்பி 6 ஆயிரத்து 741 மனுக்களுக்கு ரூ.20 கோடி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. ஆவின் பொருள் விற்பனையில் போட்டியை உருவாக்கி, புதிய விற்பனையாளர்களை நியமித்து விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை, ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் சேமிக்கப்பட்டுள்ளது. பால், பால் பொருள் விற்பனையை அதிகரிக்க 2 மொத்த விற்பனையாளர்கள், 23 சில்லரை விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும், 150 லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. உள்ளூர் பால் விற்பனை அளவு தினசரி 65 ஆயிரம் லிட்டரில் இருந்து 72 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது.
விற்பனை பிரிவு
ஈரோடு ஆவின் கீழ், புன்னம்பாறைகாடு, பர்கூர் துருசினாம்பாளையம், தாமரைக்கரை, கோவில்நத்தம், தேவர்மலை என 5 இடங்களில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் ஒப்பந்த காலத்துக்குள் கச்சா பொருளை அனுப்பாத ஒரு நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு ஆவின் ஆக்சிஸ் வங்கியில் 7 சதவீத வட்டியில் பெற்றிருந்த கடனை கனரா வங்கியில் 5.5 சதவீத வட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கனரா வங்கியில் ரூ.31 கோடி இணையத்தில், ரூ.14 கோடி என ரூ.45 கோடி ஆவினுக்கு கடன் நிலுவை உள்ளது.
கடந்த ஜூலை மாதம் இணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலை அனுப்ப ஒன்றியத்தால் உரிய வாகனங்கள் ஏற்பாடு செய்யாததால், பல கோடி ரூபாய் இழப்பும், பொருளாதார புழக்கமும் குறைந்தது. இதனால், பால் உற்பத்தியாளர்களுக்கு, 80 நாட்களுக்கு மேல் பால் பணம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. கடும் முயற்சிக்குப்பின், கடந்த அக்டோபர் மாதம் முதல் சீராக பால் அனுப்ப இணையத்தில் இருந்து உத்தரவு பெறப்பட்டு, தற்போது, 10 நாட்களில் பாலுக்கான பணம் வழங்கப்படுகிறது.
ஈரோடு ஆவினில் பால் பண்ணை மேலாண்மை திட்டம் கணினி வழிமுறைக்கு ஏற்ப, விற்பனை பிரிவு மற்றும் கணக்கியல் பிரிவுகளில் செயல்படுத்தி, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story