ஈரோட்டில் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு
பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி பெரிய மாரியம்மன் கோவில் முன்பு 5 ஆயிரத்து 1 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று முன்தினம் காலை பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். இதற்கிடையில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் மொத்தம் 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீசார் சரஸ்வதி எம்.எல்.ஏ உட்பட 24 பேரை கைது செய்து வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தடையை மீறி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story