பண்ணாரி கோவில் அருகில் குட்டையில் தண்ணீர் குடித்த குட்டி யானை
பண்ணாரி கோவில் அருகில் குட்டையில் யானை தண்ணீர் குடித்தது.
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. பண்ணாரி வனப்பகுதியில் இருந்து நேற்று வெளியே வந்த ஒரு குட்டி யானை பண்ணாரி கோவில் அருகே சுற்றித்திரிந்தது. பின்னர் அங்கு சாலையோரம் இருந்த குட்டையில் தண்ணீர் குடித்தது. கோடை வெப்பம் தாங்காமல், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி உடல் மேல் பீய்ச்சி அடித்துக்கொண்டது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தார்கள்.
பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட பண்ணாரி காட்டில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இயற்கையாக உள்ள குட்டைகள் வற்றிவிட்டன. இதனால் தண்ணீரை தேடி யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுகின்றன. அதனால் பண்ணாரி காட்டில் உள்ள குட்டைகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பவேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story