பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும் உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு


பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும் உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 2 April 2022 3:12 AM IST (Updated: 2 April 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும் என்று உள்துறை மந்திரி அமைச்சர் கூறினார்.

பெங்களூரு: பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும் என்று உள்துறை மந்திரி அமைச்சர் கூறினார்.

கடன் அட்டை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். நேற்று அவர் சித்தகங்கா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் கர்நாடக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடந்த கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டை தொடங்கி வைத்த அமித்ஷா கர்நாடக அரசு அறிவித்துள்ள பால்வள கூட்டுறவு வங்கிக்கான முத்திரையை வெளியிட்டார். அதன்பிறகு அவர் பேசியதாவது:-

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக அரசு பால்வள கூட்டுறவு வங்கியை அமைக்கிறது. இது பாராட்டுக்குரியது. பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை(கிரெடிட் கார்டு) வழங்கப்படும்.

பலப்படுத்தப்படும்

இதன் மூலம் அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் நிலை வரும். கர்நாடகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவுத்துறை பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கூட்டுறவு துறை மந்திரி எஸ்.டி. சோமசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தில் 400 படுக்கை வசதிகளுடன் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. அந்த வகையில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. கங்கை நதி தூய்மையாக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து குடிநீர் வசதி ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டது. நேரம் வரும்போது மாற்றம் ஏற்படும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு கொரோனா காலத்தில் ஏற்பட்ட 3 அலைகளையும் சிறப்பாக கையாண்டு, தடுப்பூசி செலுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தது’ என்று கூறினார்.

ஆலோசனை வழங்கினார்

இதையடுத்து கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் பெங்களூருவில் மல்லேஸ்வரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்பட அந்த குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவை பலப்படுத்துவது, வருகிற சட்டசபை தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைப்பது, அடுத்த ஓராண்டில் சிறப்பான முறையில் மக்கள் பணிகளை ஆற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியை பலப்படுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அமித்ஷா சில ஆலோசனைகளை வழங்கினார். 

மந்திரிசபை விரிவாக்கம்...

 கூட்டத்தில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்துவார் என்றும் நளின்குமார் கட்டீல் கூறினார். மேலும் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்றும், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அமித்ஷா தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு 10.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழியனுப்பி வைத்தார். 

அமித்ஷா செல்ல இருந்த சாலையில் திடீர் தீ விபத்து

துமகூருவில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாலை மார்க்கமாக அமித்ஷா செல்ல இருந்தார். இதையொட்டி, அவர் செல்லும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வசந்த்நகரில் இருக்கும் மவுண்ட் கார்மல் கல்லூரியையொட்டி உள்ள சாலையில் திடீரென்று தீப்பிடித்தது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அங்கு பிடித்த தீயை அணைத்தார்கள். சாலைக்கு அடியில் பதிக்கப்பட்டு இருந்த மின்சார கேபிள் வயர்களில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார். அதே நேரத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் காரணமாக மவுண்ட் கார்மல் கல்லூரி வழியாக செல்ல இருந்த அமித்ஷா, மாற்று பாதையில் அரண்மனை மைதானத்திற்கு சென்றார். 

Next Story