வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு லாரி டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு லாரி டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திரு.வி.க நகர்,
சென்னை புளியந்தோப்பு, பவுடர் மில்ஸ் சாலையில் உள்ள சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நேற்று அனைத்து துறைமுக லாரி டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் குகன் டேவிட், செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன உரிமையாளர்களுக்கு தெரியபடுத்தாமல் ஆன்லைன் மூலம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் சென்னை புறநகரில் உள்ள வானகரம், பரனூர், சூரப்பட்டு, நெமிலி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து வானகரம் சுங்கச்சாவடி அருகே சென்னை லாரி, டிப்பர், டேங்கர், மணல் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story