பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதல்


பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதல்
x
தினத்தந்தி 2 April 2022 6:58 PM IST (Updated: 2 April 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியது. தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேடசந்தூர்:

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சூர்யநாராயணன். இவரது மகன் உதயகுமார் (வயது 27). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனது தந்தை சூர்யநாராயணனுடன் பெங்களூருவுக்கு தனது காரில் புறப்பட்டார். காரை உதயகுமார் ஓட்டினார். 

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவு மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் பழுதானது. இதனையடுத்து காரை சாலையோரத்தில் உதயகுமார் நிறுத்தினார். 

பின்னர் தந்தையும், மகனும் காரை விட்டு இறங்கி சாலையோரத்தில் நின்று, சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்துடன் பேசி கொண்டிருந்தனர். 

அந்த சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி ஒன்று, பழுதாகி நின்ற கார் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

தங்களது கண் எதிரே நடந்த இந்த விபத்தை கண்ட தந்தையும், மகனும் அதிர்ச்சி அடைந்தனர். காரை நிறுத்தி விட்டு, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்ததால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story