டாக்டர்கள் வேலை நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
ராஜஸ்தான் மாநிலம் லாஸ்கோட் பகுதியில் மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர் அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட அர்ச்சனா சர்மாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், டாக்டர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 300 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் பொது மருத்துவம் தொடர்பான சிகிச்சை அளிக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பணிகள் மட்டும் தடையின்றி நடந்தது.
மேலும் இந்த வேலை நிறுத்தத்தையொட்டி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் இந்திய மருத்துவ சங்கத்தினர், மெழுகுவர்த்தி ஏந்தியபடி டாக்டர் அர்ச்சனா சர்மாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து அங்கு அவர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story