விழுப்புரம் நகரில் 3 குழுக்கள் அமைப்பு
கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய விழுப்புரம் நகரில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 1½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 17 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதற்காக எல்லீஸ்சத்திரம், பில்லூர் ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் வழியாக நகரில் உள்ள 60 குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு தினந்தோறும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எதிர்வரும் கோடை காலத்தில் குடிதண்ணீர் தேவை அதிகம் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டும், குடிநீர் சிக்கனத்தை கடைபிடிக்கும் விதமாகவும் குழாய்கள் உடைப்பு, குடிநீர் வீணாக வெளியேறுதல், குழாய்களில் அடைப்பு காரணமாக தண்ணீர் வராமல் இருத்தல், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீருடன் கலந்து வருதல் போன்ற பல்வேறு புகார்கள் வரும்பட்சத்தில் அதை உடனடியாக நிவர்த்தி செய்து நகர மக்களுக்கு தினந்தோறும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திடும் வகையில் குழாய் பொருத்துனர்கள் 12 பேரை கொண்ட 3 குழுக்களை நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இக்குழுவினர்களுக்கு குடிநீர் சம்பந்தமான புகார்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அதற்கான உபகரணங்களை நேற்று நகராட்சி தலைவர் சக்கரை தமிழ்செல்வி வழங்கி அப்பணியை முடுக்கி விட்டார். அப்போது நகரில் உள்ள 42 வார்டுகளுக்கும் உடனுக்குடன் நேரில் சென்று குடிநீர் பிரச்சினை சம்பந்தமான புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது நகராட்சி துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் (பொறுப்பு) ராபர்ட்கிளைவ், பொதுப்பணி மேற்பார்வையாளர் சரவணன், பணி ஆய்வாளர் ஹரிகரன், குழாய் பொருத்துனர் அருள்ஜோதி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற கவுன்சிலர் மகாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story