கயத்தாறு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


கயத்தாறு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 April 2022 10:35 PM IST (Updated: 2 April 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ளது ராஜாபுதுக்குடி கிராமம். இந்த கிராமத்துக்கு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு ஆண்டாக போதுமான அளவு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஊருக்கு அருகே உள்ள நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மீண்டும் தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட உதவி பொறியாளர் மெர்சி, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் ரெஜினால்டு, கயத்தாறு யூனியனை சேர்ந்த என்ஜினீயர் பசீர்முகமது ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ரூ.2½ கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது.

முன்னதாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் 2 பெண்கள் மட்டும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story