மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டி
தூத்துக்குடி தருவைகுளத்தில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை பகுதியில் நேற்று மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கால்பந்து விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடலோர பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக கடலோர பகுதிகளில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மாவட்ட அளவிலான போட்டிகள் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காஞ்சீபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் நடத்தப்படுகின்றன.
அதன்படி 2021-22-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தருவைக்குளம் கடற்கரையில் வைத்து நடந்தது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தருவைக்குளம் கடற்கரையில் நடக்கிறது. இதில் 10 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.
கடற்கரை கால்பந்து விளையாட்டில் 5 வீரர்களும், கபடி போட்டியில் 6 வீரர்களும், கைப்பந்து போட்டியில் 2 வீரர்களும் கலந்துகொண்டு விளையாடுவார்கள். மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் கடந்த 26-ந்தேதி போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதுபோல் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story