கேளிக்கை நிகழ்ச்சிக்கான ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு


கேளிக்கை நிகழ்ச்சிக்கான ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 2 April 2022 10:45 PM IST (Updated: 2 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை குட்டைத்திடலில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்வதற்குரிய உரிமத்திற்கான ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக கூறி, யாரும் ஏலம் கோராததால் ஏலம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

உடுமலை குட்டைத்திடலில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்வதற்குரிய உரிமத்திற்கான ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக கூறி, யாரும் ஏலம் கோராததால் ஏலம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்த்திருவிழா
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 5-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி உடுமலையில் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டைத்திடலில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். ராட்டினம், மேஜிக் ஷோ உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதற்காக குட்டைத்திடலில் 91 சென்ட் நிலப்பரப்பில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்வதற்கான ஏலம் கடந்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த பொது ஏலம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பொது ஏலம்
ஒத்திவைக்கப்பட்ட ஏலம் கடந்த 31-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், ஏலத்திற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.58 லட்சத்தில் 4-ல் 1 பங்கு தொகையான ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சாரத்தொகையாக, ஏலம் நடைபெறுவதற்கு முன்பு வங்கி வரைவோலையாக தாலுகா அலுவலகத்தில் செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு உடுமலை தாலுகா அலுவலகத்தில் கடந்த 31-ம் தேதி ஏலம் நடத்துவதற்கான பணிகள் நடந்தன. ஏலத்தில், அச்சாரத்தொகைக்கான வங்கிவரைவோலையை 4 பேர் மட்டுமே செலுத்தி கலந்துகொண்டனர். அப்போது அரசு சார்பில் குறைந்தபட்ச ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஏலம் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கு, ஏலத்தில் கலந்துகொண்டவர்கள், அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஏலத்தொகை அதிகமாக உள்ளதாகவும், அதை குறைக்ககோரியும் வலியுறுத்தி, யாரும் ஏலம் கோரவில்லை. இதைத்தொடர்ந்து ஏலத்தொகையை குறைக்க இயலாது என்று கூறி, ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு
ஒத்திவைக்கப்பட்ட ஏலம் நேற்று நடந்தது. தாசில்தார் கணேசன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
கடந்த முறை போன்று நேற்று நடந்த ஏலத்திலும் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்கள் குறைந்தபட்ச ஏலத்தொகையை குறைக்கும்படி வலியுறுத்தினர். அதனால் ஏலம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story