திட்டக்குடி அருகே கணவர் தாக்கியதில் மனைவி மண்டை உடைந்தது தன் மீது போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம்
திட்டக்குடி அருகே தன் மீது போலீசில் புகார் அளித்த மனைவியை கணவர் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது
ராமநத்தம்
கணவர் மீது போலீசில் புகார்
திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் பொன்னுசாமி (வயது 34). இவரது மனைவி பவித்ரா(27). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தனுஷ்ஹா (8), வைஷ்ணவி (6) என்று 2 மகள்கள் உள்ளனர். பொன்னுசாமி துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சொந்த ஊர் திரும்பினார்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பொன்னுசாமி மனைவி பவித்ரா ராமநத்தம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது கணவர் கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு குடும்ப செலவுக்கு பணம் எதுவும் தருவதில்லை, மேலும் தனக்கும், குழந்தைகளுக்கும் போதிய அளவில் உணவு உள்ளிட்டவை வழங்குவதில்லை. இதுபற்றி கேட்டால் தன்னை திட்டி தாக்குவதாக கூறி புகார் செய்தார்.
வீடு திரும்பியவுடன் தாக்குதல்
இந்நிலையில், பொன்னுசாமி, அவரது மனைவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இரவில் வீட்டுக்கு சென்ற பொன்னுசாமி, தன்மீது போலீசில் புகார் செய்த பவித்ராவை தாக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளி உள்ளார். இதில் தரையில் கீழே விழுந்த பவித்ராவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story