தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தை-3 மகன்கள் கைது


தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தை-3 மகன்கள் கைது
x
தினத்தந்தி 2 April 2022 11:00 PM IST (Updated: 2 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தை, 3 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி விஸ்வநாததாஸ் நகரில் கடந்த 13-4-2014 அன்று தொழிலாளி ராஜேந்திரன் (வயது 40) தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கணபதி மற்றும் அவருடைய மகன்கள் லட்சுமணன், கண்ணன், ராமர் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கணபதி மற்றும் அவருடைய மகன்கள் லட்சுமணன், கண்ணன், ராமர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர்களை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு தூத்துக்குடி செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான கணபதி உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த கணபதி மற்றும் அவருடைய மகன்கள் லட்சுமணன், கண்ணன், ராமர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நேற்று கோவில்பட்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடி செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story