101-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும்


101-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 2 April 2022 11:47 PM IST (Updated: 2 April 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

101-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

பொறையாறு:
101-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
 செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரா.தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை 110-வது விதியின் கீழ் அறிவிக்க வேண்டுகிறோம்.
 கொரோனா தொற்று நேரத்திலும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். 
மாவட்ட கலந்தாய்வு
பணிநிரவலில் சென்றவர்களுக்கு மீண்டும் ஒருவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எம்.இ.சி.என்ற பிரச்சினை ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது காலையிலிருந்து வேலை நாள் முழுக்க இணையதளத்திலும், வாட்ஸ்-அப்பிலும் நாங்கள் மாணவர்களின் பதிவை செய்ய வேண்டியுள்ளது. 
அதில் மாணவர்களின் வருகை பதிவு, சத்துணவு, மாத்திரைகள், மாணவர்கள் மருந்து உண்பது, காய்கறிகள் உள்ளிட்ட 21 வினாக்களுக்கு ஆன்லைனில் பதிலளிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. அப்போது நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டால் மேலும் சிக்கலாகி விடுகிறது. 2 ஆசிரியர்கள், ஒரு ஆசிரியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இதிலே புள்ளி விவரங்களை எடுக்க சாத்தியமில்லை. புள்ளி விவரம் தேவை என்றால் கணிணியில் பட்டம் பெற்றவர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு அந்த பணியை வழங்கலாம்.
101-வது பிரிவு
  101-வது பிரிவு அரசாணையால் கோப்புகள் தேக்கமடைந்து ஆசிரியர்கள் முழு பணப்பயன் பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 101-வது அரசாணையை ரத்து செய்து தொடக்கக்கல்வித்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை தலைவர் திருமாறன், மாநிலத் துணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் கலியபெருமாள், வட்டார தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story