போலி கையெழுத்து மூலம் தடையின்மை சான்று பெற்ற புஞ்சை புகழூர் அ.தி.மு.க. செயலாளர் கைது


போலி கையெழுத்து மூலம் தடையின்மை சான்று பெற்ற புஞ்சை புகழூர் அ.தி.மு.க. செயலாளர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 12:11 AM IST (Updated: 3 April 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

போலி கையெழுத்து மூலம் தடையின்மை சான்று பெற்ற புஞ்சை புகழூர் அ.தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டா்.

கரூர், 
தடையில்லா சான்று
கரூர் புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 52). இவர் தற்போது நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை புஞ்சை புகழூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், செம்படாம்பாளையத்தை சேர்ந்த சுப்பையன் என்பவர் தனது நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து அதை விற்பனை செய்வதற்கு தடையில்லா சான்று வழங்க கருப்பையாவை அணுகியுள்ளார். அப்போது கருப்பையா அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக தடையின்மை சான்று வழங்க இயலாது என மறுத்துள்ளார்.
கையெழுத்து மோசடி...
இதையடுத்து, கருப்பையா பணியிட மாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில் கருப்பையாவின் கையெழுத்தை மோசடியாக போட்டு வீட்டு மனைகளுக்கு தடையின்மை சான்று பெற்று அதில் வீட்டு மனைகளை புஞ்சை புகழூர் பேரூர் கழக செயலாளர் விவேகானந்தன் என்பவர் வாங்கியுள்ளதாக கருப்பையாவுக்கு தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு மோசடி வழக்கு என்பதால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்தனர்.
மிரட்டல்
இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இளநிலை உதவியாளர் பிரவீனிடம் விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பிரவீன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் புஞ்சை புகழூர் அ.தி.மு.க. செயலாளரான விவேகானந்தன் தன்னை வீட்டிற்கு அழைத்து பேரூராட்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலிமனைகளை அப்ரூவல் செய்து கொடுக்கும்படி கேட்டார். மேலும், பழைய தேதியில் இளநிலை உதவியாளர் கருப்பையா என்பவர் கையொப்பம் போன்று போட்டு தடையின்மை சான்று தயார் செய்து தரும்படி மிரட்டினார். 
அ.தி.மு.க. செயலாளர் கைது
இதையடுத்து அலுவலக உதவியாளர் வடிவேலுவுடன் சேர்ந்து கருப்பையா கையெழுத்தை கணினியில் ஸ்கேன் செய்து மோசடியாக பதிவிட்டு தடையின்மை சான்று தயார்செய்து கொடுத்தேன். இதனைத்தொடர்ந்து விவேகானந்தன் தனது மனைகளை பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து பிரவீன் மற்றும் அலுவலக உதவியாளர் வடிவேலை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய விவேகானந்தனை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர்- கோவை ரோட்டில் காரில் வந்து கொண்டிருந்த புஞ்சை புகழூர் அ.தி.மு.க. செயலாளர் விவேகானந்தனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அம்பிகாபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story