விலை உயர்ந்த பரிசுப்பொருள் அனுப்புவதாக ராமநாதபுரம் மீனவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
விலை உயர்ந்த பரிசுப்பொருளை அமெரிக்காவில் இருந்து அனுப்புவதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட மீனவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
விலை உயர்ந்த பரிசுப்பொருளை அமெரிக்காவில் இருந்து அனுப்புவதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட மீனவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரிசு பொருள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கிளாட்வின் (வயது42). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது உடன் வேலைபார்த்த நண்பர் ஒருவர் ஒரு எண்ணை கொடுத்து இவர்கள் அமெரிக்க நண்பர்கள் என்றும், நன்றாக பழகலாம் என்றும், பிறந்தநாள் போன்றவற்றிற்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சி அடைய செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பி கிளாட்வின் அந்த எண்ணை வாங்கி பதிவு செய்து கொண்டார்.
இதன் பின்னர் வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்ததும் கிளாட்வின் அந்த எண்ணை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது மரியஜொயல் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆனார். இதைதொடர்ந்து 2 பேரும் தகவல்களை பரிமாறி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக வாட்ஸ்-அப் மூலம் பழக்கத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி கிளாட்வின் தனது பெற்றோருக்கு திருமண நாள் வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு மரியஜொயல் பரிசுப்பொருள் அனுப்பி வைப்பதாகவும், ஆனால் அதனை உரிய கட்டணத்தை செலுத்தி நீங்கள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பெரிய பார்சல்
இதையடுத்து பரிசுப்பொருள் ஒன்றை அனுப்பி உள்ளதாக மரிய ஜொயல் தெரிவித்துள்ளார். அவர் இந்த தகவலை தெரிவித்த மறுநாள் கொரியர் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட அனிதா சர்மா என்ற பெண் ஒருவர் டெல்லி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ஒரு பெரிய பார்சல் வந்துள்ளதாகவும் அதனை ரூ.34 ஆயிரத்து 200 டெலிவரி கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
கிளாட்வின் உடனடியாக அந்த பணத்தினை வங்கி மூலம் அனுப்பி உள்ளார். மீண்டும் தொடர்பு கொண்ட அனிதா சர்மா தங்களுக்கு வந்துள்ள பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளது. அதனை பெற இந்திய நாட்டின் வரி ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியதை நம்பி, அதனையும் கிளாட்வின் அனுப்பி வைத்துள்ளார்.
புகார்
இந்த பணம் சென்றடைந்த நிலையில் மீண்டும் தொடர்பு கொண்ட அனிதா சர்மா தங்கம் உள்ளிட்டவை இருப்பதால் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேலும், ரூ.4 லட்சம் செலுத்தினால் தான் பார்சலை அனுப்ப முடியும் என்று கூறியுள்ளார். அடுத்தடுத்து பணத்தை மட்டுமே கேட்கின்றனர் என்பதால் சந்தேகமடைந்த கிளாட்வின் தனது நண்பர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் இது மோசடி கும்பலின் வேலை என்று தெரிந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிளாட்வின் மொத்தம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 200 பணத்தை பெற்றுத்தந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story