டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மருத்துவ பணிகள் பாதிப்பு


டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மருத்துவ பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 3 April 2022 12:24 AM IST (Updated: 3 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக நடைபெறும் உயிரிழப்பிற்காக போலீசார் வழக்குப்பதிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன.

ராமநாதபுரம்
மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக நடைபெறும் உயிரிழப்பிற்காக போலீசார் வழக்குப்பதிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்த போராட்டம்
மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக நடைபெறும் உயிரிழப்பிற்காக மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. மருத்துவ நிபுணர்குழுவின் ஆய்வுக்கு பின்னர் சிகிச்சையில் கவனக்குறைவு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நேற்று நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. 
சங்கத்தின் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ், மாநில நிர்வாகி சின்னதுரை அப்துல்லா, செயலாளர் பரணிகுமார், பொருளாளர் ராசிகா ஆகிய டாக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 330 டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கோரிக்கை மனு
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:- 
ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர் அர்ச்சனா சர்மா என்பவர் அவரின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவத்திற்கு பின்னர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வளவோ முயன்றும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் போலீஸ் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தபின்னர் உடலை வாங்கி சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த டாக்டர் அர்ச்சனா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 
இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். அவசரம் இல்லாத மருத்துவ பணிகளை நிறுத்தி விட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம். டாக்டர்கள் மீது தவறான வழக்கு பதிவு செய்வதை போலீசார் கைவிட வேண்டும். பாதிக்கப்பட்ட டாக்டர் அர்ச்சனா ஷர்மாவின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையான மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்ட முடிவில் கோரிக்கை மனுவை பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பினர். டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ பணிகள் முடங்கியது. வெளி நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

Next Story