புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்கள் அவதி
புகழூர் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
நொய்யல்,
சர்க்கரை ஆலை
புகழூர் செம்படாபாளையத்தில் பாரி சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கி அரைத்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் நிலக்கரி மூலம் பாய்லர்கள் இயக்கப்படுகிறது.
இந்த பாய்லரிலிருந்து வெளியேறும் கரித்துகள் காற்றின் மூலம் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பறந்து கந்தம்பாளையம் பகுதிவரை நெடுகிலும் விழுந்து வருகிறது. மேலும், வீடுகளுக்குள் விழுந்து வருவதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
அதேபோல் இந்த சர்க்கரை ஆலையில் இருந்து பக்காஸ் கழிவுகளும் காற்றில் பறந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது சம்பந்தமாக சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகழூர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் சர்க்கரை ஆலை அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் நிலக்கரித்துகள் புகழூர் செம்படா பாளையத்திலிருந்து கந்தம்பாளையம் வரை நெடுகிலும் உள்ள வீடுகளில் விழுந்தும், சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்களில் விழுந்தும் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் உறுதி
அதேபோல் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் பக்காஸ் கழிவுகளால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இரு துகள்களும் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது வரும் 10 நாட்களுக்குள் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் நிலக்கரி துகள்கள் வெளியேறாமல் நடவடிக்கை எடுப்பதாகவும், அதேபோல் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் பக்காஸ் துகள்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சர்க்கரை ஆலை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story