நெல்லையில் திடீர் மழை
நெல்லையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீர் மழை
வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நெல்லை மாவட்ட அணை பகுதியிலும், தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் லேசான மழை பெய்தது. எனினும் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் அதிகமாகவே காணப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மாலை வரையிலும் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 100.60 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் மாலையில் திடீரென்று மேகங்கள் திரண்டு, 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
வெப்பம் தணிந்தது
நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை கொக்கிரகுளம், மேலப்பாளையம் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை சந்திப்பு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடப்பதால், அங்கு சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு குளம் போன்று தேங்கிய மழைநீரில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
Related Tags :
Next Story